Pages

Tuesday, August 7, 2012

‘கியூரியாசிட்டி’ விண்கலம் எங்கு இறங்க வேண்டும் என்பதை தீர்மானித்த குழுவில் இந்தியரும் ஒருவர்


செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக நாசாவால் அனுப்பப்பட்டுள்ள கியூரியாசிட்டி விண்கலம் எங்கு தரையிறங்க வேண்டும் என்பதை தீர்மானித்த குழுவில் ஒரு இந்தியரும் இடம் பெற்றுள்ளார். அவரது பெயர் அமிதாப் கோஷ்.

கியூரியாசிட்டியை எங்கு தரையிங்கச் செய்ய வேண்டும் என்ற முடிவை எடுத்தது தங்களுக்குப் பெரும் சவாலாகவும், திரில்லிங்காகவும் இருந்ததாக கோஷ் கூறியுள்ளார்.

நாசாவின் செவ்வாய் கிரக ஆராய்ச்சி மிஷனின், அறிவியல் செயல்பாட்டு பணிக் குழுவின் தலைவரான கோஷ், கியூரியாசிட்டி எங்கு லேண்ட் ஆக வேண்டும் என்பதை தீர்மானிக்க அமைக்கப்பட்ட குழுவிலும் இடம் பெற்று முக்கியப் பங்காற்றியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நாங்கள் கியூரியாசிட்டி எங்கு இறங்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க கூடியபோதெல்லாம் பதட்டமாகவே இருந்தோம். பெரும் கவலையாகவும் இருந்தது. இது மிக மிக கடினமான பணியாக இருந்தது.

பூமிக்கு சற்றும் அறிமுகம் இல்லாத நிலையில், முற்றிலும் புதிய தொழில்நுட்பத்துடன், அது செயல்படுமா, இல்லையா என்பதே தெரியாத நிலையில், உங்களை பூமிக்கு அனுப்பி இறங்கு என்று சொன்னால் எப்படி இருக்குமோ அதே நிலையில்தான் கியூரியாசிட்டி விண்கலமும் இருந்தது.

எனவே இந்த மிகப் பெரிய பணியை மிகவும் கவனத்துடன் கையாண்டோம். ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்த உழைப்பு இது. இது மட்டும் தோல்வி அடைந்திருந்தால், அவ்வளவுதான், எல்லாமே முடிந்து போயிருக்கும். மறுபடியும் செவ்வாயைப் பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியாமல் போயிருக்கும் என்றார் அவர்.

பூமியிலிருந்து கிட்டத்தட்ட 570 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து செவ்வாய் கிரகத்திற்கு வந்து சேர்ந்துள்ளது கியூரியாசிட்டி. அது இறங்கிய இடத்தை முதலில் தேர்வு செய்ய ஆராய்ச்சிகள் நடந்தபோது மெளன்ட் ஷேப் என்ற செவ்வாய் கிரக மலைக்குன்று உள்ள பகுதியில்தான் விண்கலத்தை தரையிறக்க நல்ல இடம் என்று முடிவுக்கு வரப்பட்டது. அந்தப் பகுதியில் ஈரப்பதம் இருப்பதையும் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் ஆய்வுக்கு இந்த மலைக்குன்று அருகே உள்ள கேல் கிரேட்டர் பகுதிதான் சரியானது என்ற தீர்மானத்திற்கும் வந்தனர்.

கியூரியாசிட்டி இறங்கியுள்ள பகுதியில் களிமண் இருப்பதாகவும், அங்கு சல்பேட் தாது நிறைந்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

கியூரியாசிட்டி விண்கலம் தனது முதல் முக்கியப் பணியாக மெளன்ட் ஷேப் மலைக்குன்றுக்குச் சென்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளது. அதில் கிடைக்கப் போகும் தகவல்கள் ஒவ்வொன்றும் திருப்புமுனையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

No comments:

Post a Comment