Pages

Thursday, December 6, 2012

21-12-2012 உண்மையின் இரகசியம்!!!!!!!!!!!!!

இந்த மாதம் டிசம்பர் மாதம் 21ம் திகதி மாயன் நாட்காட்டி முடிவிற்கு வருகிறது உலகம் அழியப்போகிறது என ஆரம்பித்து பல பல புனைகதைகளிற்கு கை, கால் வைத்து மக்களிடைய பீதியை ஏற்படுத்தும் முயற்சி அமெரிக்காவை உத்தியோகபூர்வமாக அறிக்கை விட வைக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளது.

பொதுவில் வதந்திகளுக்குப் பதில் கூறுவதில் அர்த்தமே இல்லை.  ஒரு வகையில் அது அந்த வதந்தியை மேலும் பரப்புவதாகவே அமையும்.

அடுத்த மாதம் 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை பூமி இருளில் மூழ்கிவிடுமாம். அது தான் அந்த வதந்தி. நாசா இது பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த வதந்தி கூறுகிறது.

இது உண்மையா? அறிந்த வரையில் நாசா அப்படி எந்த எச்சரிக்கையையும் விடவில்லை. உலகில் உள்ள அனைத்து மின்சார நிலையங்களும் மின் உற்பத்தி செய்யாமல் பாதிக்கப்படும் என்ற அர்த்தம் என்றால் அது சாத்தியமில்லை. அனைத்து மின் நிலையங்களும் ஒரே சமயத்தில் செயலற்றுப் போக வாய்ப்பில்லை.

அல்லது மூன்று நாள் சூரியனே தலை காட்டாது. மூன்று நாளும் ஒரே இருளாக இருக்கும் என்றால் அதற்கும் சாத்தியமில்லை.சூரியன் தனது இடத்திலிருந்து எங்கோ மூன்று நாள் லீவில் போய்விட்டுத் திரும்ப வாய்ப்பில்லை. பூமி  தனது அச்சில் சுழல்வதால் தான் இரவும் பகலும் ஏற்படுகின்றன. பூமி தனது அச்சில் சுழலாமல் நிலை குத்தி நிற்பதாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் பூமியின் ஒரு பாதியில் மூன்று நாள் தொடர்ந்து இரவாக இருக்கும். மறு பாதியில் மூன்று நாள் தொடர்ந்து பகலாக இருக்கும். ஆகவே பூமி முழுவதிலும் மூன்று நாள் இரவாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. இது பகுத்தறிவுக்கு முரணானது.

சூரியன் மற்றும் பூமியின் alignment  பற்றிய சமாச்சாரமும் அபத்தமாகவே உள்ளது. பூமியின் Dimension  மாற்றம் வெறும் உளறல். நாசா இப்படி கூறியது அப்படிக் கூறியது என்று வதந்தி கிளம்புவது இது முதல் தடவை அல்ல.

Pray  செய்பவர்கள் தப்பித்துக் கொள்வார்கள் என்றால் நியூயோர்க் நகரை சான்டி புயல் தாக்கிய போது அவரவர் தங்கள் இடத்திலிருந்து பிரார்த்தனை செய்திருந்தால் தப்பித்திருக்கலாமே. நமது உலகம், சூரிய மண்டலம், அண்டம், பிரபஞ்சம் ஆகியவை ஓர் ஒழுங்கு உட்பட்டவை. விபரீத மாறுதல்களுக்கு இடமே இல்லை. சந்திரனை விடப் பலப் பல மடங்கு பெரியதான ஒன்று (பெரிய கிரகம் என்ற வைத்துக்கொள்ளுங்களேன்)  சூரியனுக்கும் பூமிக்கும் குறுக்கே வந்து நிற்குமானால் பூமிக்கு சூரிய ஒளியே கிடைக்காமல் பூமி முற்றிலும் இருளில் மூழ்கலாம்.

அப்படி பிரமாண்டமான ஒன்று குறுக்கே நிற்பதானால் அது  விண்வெளியில் எங்கிருந்தாவது வந்தாக வேண்டும். பூமியை நோக்கி அப்படி எதுவும் வருவதாக இதுவரை கண்டறியப்படவில்லை. அப்படி ஒன்று வருவதாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டால் இத்தனை நேரம் விஞ்ஞானிகள் அதைக் கண்டுபிடித்திருப்பார்கள். அப்படி ஒன்று வருவதாக வைத்துக் கொண்டால்  காரை பிரேக் போட்டு நிறுத்துவது போல அது திடீர் என்று பிரேக் போட்டு நிற்க வாய்ப்பே இல்லை. பூமி அல்லது சந்திரன் பிரேக் போட்டு நிற்காது. ஆகவே எதுவும் சூரியனுக்கும் பூமிக்கும் குறுக்கே வந்து மூன்று நாள் முகாம் போட முடியாது.

சரி, அது பிரேக் போட்டு நிற்பதாகவே வைத்துக் கொள்வோம். மறுபடி அதை எந்த சக்தி அங்கிருந்து விலகும்? மூன்று நாட்கள் கழித்து அது தானாக எப்படி விலகும்?  இது நியூட்டன் வகுத்த விதிகளை மீறுவதாக இருக்கும்.

ஒருவேளை பூமியை விட பிரும்மாண்டமான ஒன்று சூரியனுக்கும் பூமிக்கும் குறுக்கே வந்து நின்று பூமிக்கு சூரிய ஒளி கிடைக்காமல் தடுக்கும் என்றால் அது சில நிமிஷ நேரமே (சூரிய கிரகணத்தின் போது நிகழ்வது போல்)  அவ்விதம் தடுக்க முடியும். ஏனெனில் அதுவும் பூமியைப் போல சூரியனை சுற்றியாக வேண்டும். அப்படியானால் சூரியனைச் சுற்றி வருவதில்  அதன் வேகமும் பூமியின் வேகமும் வித்தியாசப்படும். அந்த பிரமாண்டமான ஒன்றினால் தொடர்ந்து மூன்று நாட்கள் அல்லது பல நாட்கள் பூமிக்கு சூரிய ஒளி கிடைக்காமல் தடுக்க முடியாது. அப்படி நிகழ்வதானால் அது கெப்ளர் வகுத்த விதிகளை மீறிவதாக இருக்கும்.

ஆகவே வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். டிசம்பர் 23, 24 , 25 தேதிகள் வழக்கம் போலத் தான் இருக்கும் அமைதியாய் இருங்கள்… உலகில் எந்த மாற்றமுமே டிசம்பர் மாதம் 21ம் திகதி நடைபெறப்போவதில்லை. மாயன் நாட்காட்டியில் கூட ஒரு ஆண்டுக்கான சுற்று டிசம்பர் 21ம் திகதி முடிந்து புதிய ஆண்டு டிசம்பர் 22ம் திகதி தொடங்குகிறதே தவிர அந்த நாட்காட்டியின் ஊழிக்காலம் முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான வதந்திகளை கடந்த காலங்களிலும் பல வேறு விதமாக வந்திருக்கின்றன. உலகம் அழியப்போகிறது என்ற வதந்தி 2003ம் ஆண்டு, 2004ம் ஆண்டில் கூட வந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த ஒரு அழிவோ மாற்றமோ டிசம்பர் 21ம் திகதி இடம்பெறப்போவதில்லை. அது மற்றைய நாட்களைப் போல சாதாரண நாட்களே எனத் தெரிவித்துள்ளது. கிரகங்கள் பூமியை நோக்கி வருகின்றன. எரிகற்கள் விழப்போகின்றன என்பதெல்லாம் கட்டுக்கதை.

எங்களிலும் பலர் இந்தக் கதைகளை நம்பி, இனி எதற்குப் பணம் பொருள் என்று கடணட்டையிலும், வங்கிக்கடனிலிமிருந்து பணம்; பெற்று வீணாய் செலவழித்தால் டிசம்பர் 22ம் திகதியிலிருந்து அவற்றைக் திருப்பிச் செலுத்துவதற்குரிய வழியையும் தயார் படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் டிசம்பர் 21ம் திகதியில் உலகில் ஒன்றுமே மாறப்போவதில்லை.
(http://www.paristamil.com/tamilnews/view-news-MjM1Nzk5Mzc2.htm#.UMCVHeRtizQ)

Thursday, August 9, 2012

நாசாவில் சிரேஷ்ட ஆய்வுகள் விஞ்ஞானியாக இலங்கை விஞ்ஞானி


செவ்வாய்க் கிரகத்துக்கு அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவால் வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது கியூரியாசிட்டி ரோவர் விண்கலம்.

இதன் மூலம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை அமெரிக்கா நிலை நாட்டி உள்ளது.

அமெரிக்காவின் இந்த வெற்றியில் இலங்கை விஞ்ஞானி ஒருவருக்கும் மிக காத்திரமான பங்கு உள்ளது.

நாசாவில் சிரேஷ்ட ஆய்வுகள் விஞ்ஞானியாக பணியாற்றி வருகின்றார் கலாநிதி சரத் குணபால.

ரோவர் விண்கலத்தில் ஆறு பிரதான உபகரணங்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இவற்றுள் முக்கியமான ஒன்று டீ. எல். எப் என்கிற லேசர் உபகரணம்.

செவ்வாய்க் கிரகத்தில் மீதேன் வாயு காணப்படுகின்றதா? என்பதை ஆராய இவ்வுபகரணம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

செவ்வாயில் கடந்த காலங்களில் உயிரினங்கள் வாழ்ந்தனவா? என்பதை மீதேன் வாயு தொடர்பான ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்த வாய்ப்புக்கள் உள்ளன.

இந்நிலையில் இவ்வுபகரணத்தை இலங்கை விஞ்ஞானி கலாநிதி சரத் குணபால தலைமையிலான நிபுணர்கள் குழுதான் வடிவமைத்துக் கொடுத்து உள்ளது.

Tuesday, August 7, 2012

‘கியூரியாசிட்டி’ விண்கலம் எங்கு இறங்க வேண்டும் என்பதை தீர்மானித்த குழுவில் இந்தியரும் ஒருவர்


செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக நாசாவால் அனுப்பப்பட்டுள்ள கியூரியாசிட்டி விண்கலம் எங்கு தரையிறங்க வேண்டும் என்பதை தீர்மானித்த குழுவில் ஒரு இந்தியரும் இடம் பெற்றுள்ளார். அவரது பெயர் அமிதாப் கோஷ்.

கியூரியாசிட்டியை எங்கு தரையிங்கச் செய்ய வேண்டும் என்ற முடிவை எடுத்தது தங்களுக்குப் பெரும் சவாலாகவும், திரில்லிங்காகவும் இருந்ததாக கோஷ் கூறியுள்ளார்.

நாசாவின் செவ்வாய் கிரக ஆராய்ச்சி மிஷனின், அறிவியல் செயல்பாட்டு பணிக் குழுவின் தலைவரான கோஷ், கியூரியாசிட்டி எங்கு லேண்ட் ஆக வேண்டும் என்பதை தீர்மானிக்க அமைக்கப்பட்ட குழுவிலும் இடம் பெற்று முக்கியப் பங்காற்றியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நாங்கள் கியூரியாசிட்டி எங்கு இறங்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க கூடியபோதெல்லாம் பதட்டமாகவே இருந்தோம். பெரும் கவலையாகவும் இருந்தது. இது மிக மிக கடினமான பணியாக இருந்தது.

பூமிக்கு சற்றும் அறிமுகம் இல்லாத நிலையில், முற்றிலும் புதிய தொழில்நுட்பத்துடன், அது செயல்படுமா, இல்லையா என்பதே தெரியாத நிலையில், உங்களை பூமிக்கு அனுப்பி இறங்கு என்று சொன்னால் எப்படி இருக்குமோ அதே நிலையில்தான் கியூரியாசிட்டி விண்கலமும் இருந்தது.

எனவே இந்த மிகப் பெரிய பணியை மிகவும் கவனத்துடன் கையாண்டோம். ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்த உழைப்பு இது. இது மட்டும் தோல்வி அடைந்திருந்தால், அவ்வளவுதான், எல்லாமே முடிந்து போயிருக்கும். மறுபடியும் செவ்வாயைப் பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியாமல் போயிருக்கும் என்றார் அவர்.

பூமியிலிருந்து கிட்டத்தட்ட 570 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து செவ்வாய் கிரகத்திற்கு வந்து சேர்ந்துள்ளது கியூரியாசிட்டி. அது இறங்கிய இடத்தை முதலில் தேர்வு செய்ய ஆராய்ச்சிகள் நடந்தபோது மெளன்ட் ஷேப் என்ற செவ்வாய் கிரக மலைக்குன்று உள்ள பகுதியில்தான் விண்கலத்தை தரையிறக்க நல்ல இடம் என்று முடிவுக்கு வரப்பட்டது. அந்தப் பகுதியில் ஈரப்பதம் இருப்பதையும் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் ஆய்வுக்கு இந்த மலைக்குன்று அருகே உள்ள கேல் கிரேட்டர் பகுதிதான் சரியானது என்ற தீர்மானத்திற்கும் வந்தனர்.

கியூரியாசிட்டி இறங்கியுள்ள பகுதியில் களிமண் இருப்பதாகவும், அங்கு சல்பேட் தாது நிறைந்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

கியூரியாசிட்டி விண்கலம் தனது முதல் முக்கியப் பணியாக மெளன்ட் ஷேப் மலைக்குன்றுக்குச் சென்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளது. அதில் கிடைக்கப் போகும் தகவல்கள் ஒவ்வொன்றும் திருப்புமுனையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Monday, August 6, 2012

மனித குலத்தின் மிகப் பெரிய மைல் கல் சாதனை

 மனிதனின் மாபெரும் அறிவியல் சாதனைகளில் மற்றும் ஒன்று இன்று அரங்கேறியுள்ளது. பூமியில் அல்ல – நம்மை விட்டு வெகு தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தில்.
அமெரிக்காவின் நாசா அனுப்பிய மார்ஸ் ரோவரான, மார்ஸ் கியூரியாசிட்டி விண்கலம் இன்று செவ்வாய் கிரகத்தில் அழகாக தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. மனித குலத்தின் மிகப் பெரிய மைல் கல் சாதனையில் இதற்கும் மிகப் பெரிய முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது.
ஒரு டன் எடை கொண்ட இந்த கியூரியாசிட்டி விண்கலம்தான் இதுவரை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப‌ப்பட்ட விண்கலங்களிலேயே பெரியதாகும்.
8 மாத கால பயணத்தை முடித்து இன்று பத்திரமாக செவ்வாய் கிரகத்தில் லேண்ட் ஆகியுள்ள இந்த விண்கலம் அடுத்த 2 ஆண்டு காலத்திற்கு செவ்வாய் கிரகத்தை அக்குவேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து அனுப்பப்போகும் படங்களும், வீடியோக்களும், ஆய்வுத் தகவல்களும் மனித குலத்தை மாற்றிப் போடப் போகும் முக்கிய விஷயமாகும்.
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளது, உயிர் வாழத்தகுதியானதாக இருக்கிறதா, உயிரினங்கள் ஏதேனும் அங்கு இருக்கின்றனவா என்பது குறித்த முக்கிய ஆய்வுக்கு இந்த கியூரியாசிட்டி உதவப் போகிறது.
இந்த விண்கலத்தில் 10 விதம் விதமான அறிவியல் உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.இவைதான் ஆய்வுக்குப் பயன்படப் போகின்றன. இதற்கு முன்பு அனுப்பப்பட்ட மார்ஸ் ஸ்பிரிட், ஆப்பர்சூனிட்டி ஆகிய விண்கலங்களில் பொருத்தப்பட்டிருந்த சாதனங்களை விட இவை 15 மடங்கு அதிக எடை கொண்டவையாகும்.
மேலும் சில உபகரணங்கள் இதுவரை அனுப்பப்படாத புதிய சாதனங்கள். குறிப்பாக லேசர் பயரிங் சாதனம். இது பாறைப் பகுதியின் வேதித் தன்மையை குறிப்பிட்ட தூரத்தில் இருந்து ஆராயும் வல்லமை படைத்ததாகும்.
மேலும் கியூரியாசிட்டியின் கைகள் போல செயல்படும் ரோபாட்டிக் இயந்திரங்கள் செவ்வாய் கிரகத்தின் தரை மற்றும் பாறைப் பகுதியில் துளையிட்டு ஆய்வு நடத்தக் கூடியவையாகும். மேலும் செவ்வாய் கிரக மண்ணை அள்ளி எடுத்து சோதனை செய்யவும் இது உதவும். இந்த சோதனைக்கான அத்தனை வசதிகளும் கியூரியாசிட்டியிலேயே உள்ளன. எனவேதான் இதை ஒரு குட்டி ஆய்வகமாக கூறுகிறோம். அதாவது இந்த விண்கலமே அத்தனை ஆய்வுகளையும் செய்யும் வகையில் வடிவமைத்துள்ளனர் நாசா விஞ்ஞானிகள்.
எனவே கியூரியாசிட்டியின் இந்த பயணம் மனித குலத்திற்கு மிக மிக முக்கியமானது என்பதில் சந்தேகமில்லை. மேலும் மனிதனை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் முயற்சிகளுக்கும் இந்த வி்ண்கலத்தின் பயணம் மிக மிக முக்கியமானது.
2030ம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை ஏற்கனவே அமெரிக்கா அறிவித்துள்ளது. அதற்கான திட்டமிடல்களும், ஆய்வுகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. எனவே கியூரியாசிட்டி தரப் போகும் தகவல்கள் மிகுந்த ஆர்வத்தையும், எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளன.
செவ்வாய் கிரக நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் கியூரியாசி்ட்டி தரையிறங்கியுள்ளது. கேல் கிரேட்டர் பகுதியில், ஒரு மலைக்கு அருகே இந்த விண்கலம் தற்போது இறங்கி நிற்கிறது.
இனிமேல்தான் தனது ஆய்வுகளை அது தொடங்கவுள்ளது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருக்கிறதா என்ற மிக முக்கியமான ஆய்வைத் தொடங்கப் போகும் கியூரியாசிட்டி மனித குலத்தை எந்த அளவுக்கு மாற்றி அமைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
தற்போது செவ்வாய் கிரகத்தில் இறங்கியபோது தனது நிழல் கிரகத்தின் தரையில் படிந்ததை படம் எடுத்து அனுப்பியுள்ளது கியூரியாசிட்டி. இது அந்த விண்கலத்தின் நிழல் அல்ல, மாறாக மனித குலத்தின் சாதனை நிழல் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

Thursday, August 2, 2012

பூமியின் மீது மோதிய கிரகத்தின் சிதறல் தான் சந்திரன்
பூமியின் மீது மோதிய கிரகத்தின் சிதறல் தான் சந்திரன் என்பது தற்போது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.நாம் வாழும் கிரகமான பூமியின் துணைக்கோள் சந்திரன் எப்படி உருவானது என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகின்றது.



பூமியின் சிதறலே சந்திரன் என முந்தைய ஆய்வு தெரிவித்தது. அந்த சிதறல் எப்படி உருவானது என்பது குறித்து விஞ்ஞானிகள் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்காக சந்திரன் மற்றும் பூமியிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
அதில் சந்திரனில் உள்ள மாதிரியில் பூமியில் இருப்பது போன்றே இரும்பு தாதுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் இவைகள் ஒரே அளவில் இல்லை. சற்று வித்தியாசத்துடன் காணப்பட்டது.
இவைகள் தியா என்ற கிரகத்தின் மாதிரியுடன் தொடர்புடையதாக உள்ளன. எனவே, பூமி அதிவேகமாக சுற்றிய போது தியா என்ற பெரிய கிரகம் மோதியதில் விபத்து ஏற்பட்டிருக்கலாம்.
அதில் இருந்து விழுந்த சிதறலே சந்திரனாக மாறி இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Thursday, December 8, 2011

பூமியைப் போன்றே புதிய கிரகம் கண்டுபிடிப்பு

சுமார் 600 லட்சம் கோடி கி.மீ. தூரத்தில் பூமி போலவே ஒரு கிரகம் இருப்பதை நாசாவின் கெப்ளர் விண்கலம் கண்டுபிடித்துள்ளது.
அண்டவெளியில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் வேறு ஏதும் கிரகங்கள் இருக்கிறதா என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தின்(நாசா) கெப்ளர் விண்கலம் ஆராய்ச்சி செய்து வருகிறது.

வெகு தொலைவில் ஒரு நட்சத்திரத்தை சுற்றும் கிரகம் ஒன்று ஏறக்குறைய பூமி போலவே இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு தெரியவந்தது.

அதில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதை விஞ்ஞானிகள் தற்போது உறுதி செய்துள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறியதாவது: சுமார் 600 லட்சம் கோடி கி.மீ. தூரத்தில் பூமி போலவே ஒரு கிரகம் இருப்பதை கெப்ளரில் இருக்கும் நவீன கமெராக்கள் உறுதி செய்துள்ளன.

சூரியன் போன்ற நட்சத்திரம் ஒன்றை அந்த கிரகம் பாதுகாப்பான தொலைவில் சுற்றி வருகிறது. அதன் வெப்பநிலை உட்பட பல அம்சங்களை பார்க்கும் போது உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகவே தெரிகிறது.

கெப்ளர் 22பி என்று அதற்கு பெயரிடப்பட்டுள்ளது. அது பூமியைவிட சுமார் 2.4 மடங்கு பெரிதாக இருக்கலாம் என்று தெரிகிறது