Pages

Monday, July 18, 2011

விண்வெளி மையத்தில் மோத இருந்த சோவியத் செயற்கைக் கோள்!

ஹூஸ்டன்: விண்ணில் கட்டப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் மீது பழைய செயற்கைக் கோள் ஒன்றின் சிதைந்த பாகங்கள் மோதும் ஆபத்து நிலவியதால் பரபரப்பு நிலவியது. ஆனால், இந்த மோதலுக்கான வாய்ப்பு மிகவும் குறைந்துவி்ட்டதால் விஞ்ஞானிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.

சமீபத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு விண்வெளி ஓடமான அட்லாண்டிஸ் வெள்ளிக்கிழமை சென்றது. விண் நிலையத்தை உருவாக்குவதற்கான பாகங்களை 12வது முறையாக அட்லாண்டிஸ் எடுத்துச் சென்றுள்ளது.

மேலும் விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்களுக்கு ஓராண்டுக்குத் தேவையான உணவு, தண்ணீரையும் அட்லாண்டிஸ் கொண்டு சென்றது. இந்நிலையில், 1970ம் ஆண்டு செலுத்தப்பட்டு இப்போது செயலிழந்து விண்ணில் மிதந்து கொண்டிருக்கும் சோவியத் யூனியனின் செயற்கைக்கோளின் ஒரு சிதைந்த பாகம், சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி வந்து கொண்டுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா கூறியது.

இந்த பாகங்கள் மோதினால் விண் நிலையம் மற்றும் அதில் இணைந்துள்ள அட்லாண்டிஸ் ஓடம் ஆகியவற்றுக்கு பெரும் சேதம் ஏற்படும் என்பதால், அதிலுள்ள விண்வெளி வீரர்களை அட்லாண்டிஸ் மூலம் உடனடியாக பூமிக்குத் திரும்ப அழைப்பது குறித்தும் அல்லது விண்வெளி மையத்தையே சிறிது தூரத்துக்கு இடம் நகர்த்தவும் நாஸா திட்டமிட்டு வந்தது.

இந் நிலையில், செயற்கைக் கோளில் பாகங்களின் சுற்றுப் பாதை மாறிவிட்டதால் அவை விண்வெளி மையத்தின் மோத வாய்ப்பில்லை என்று நாஸா இப்போது அறிவித்துள்ளது. விண்வெளி மையத்தில் பழுதடைந்துள்ள ஒரு பம்ப்பை சரி செய்ய வீரர்கள் இன்று விண்வெளியில் நடக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர மேலும் சில சீரமைப்புப் பணிகளையும் மேற்கொள்ள உள்ளனர். இதற்காக அட்லாண்டிஸ் விண்கலத்தின் பயண நாள் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலில் 13 நாட்களுக்குப் பின் ஜூலை 21ம் தேதி பூமிக்குத் திரும்ப இருந்தது அட்லாண்டிஸ். விண்வெளி மையத்தில் இப்போது அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 10 வீரர்கள் உள்ளனர்.

இந்த மையத்தின் பாகங்கள், ஷட்டில் ரக விண்கலங்கள் மூலம் ஒவ்வொன்றாக பூமியிலிருந்து பல முறை எடுத்துச் செல்லப்பட்டு கட்டப்பட்டு வருகிறது. 1998ம் ஆண்டு தொடங்கிய இதன் கட்டுமானப் பணி 2012ம் ஆண்டில் நிறைவடையவுள்ளது. ஷட்டில் ரக விண்கலங்களில் கடைசியாக இயக்கப்படும் ஓடம் அட்லாண்டிஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பயணத்துடன் அட்லாண்டிஸ் கலமும் தரையிறக்கப்படவுள்ளது. இதையடுத்து வேறு ரக விண்கலங்களை நாஸா பயன்படுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment