Pages

Monday, August 1, 2011

பூமி

பூமி (Earth) சூரிய மண்டலத்தில் மூன்றாவதாக அமைந்துள்ள கிரகம் ஆகும். இதன் துணைக்கிரகமாக சந்திரன் விளங்குகிறது. அது பூமியைச் சுற்றி வருகிறது. பூமி சூரியனைச் சுற்றிவர முன்னூற்றி அறுபத்தைந்தேகால் நாட்கள் ஆகிறது. பூமி தன் அச்சில் சுழல்கிறது. அதன்மூலம் இரவும் பகலும் உருவாகின்றன. சூரிய மண்டலம் உட்பட அனைத்து நட்சத்திர மண்டலங்களிலும் பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்கின்றன. உயிரினங்கள் வாழ்வதற்கு தேவையான காற்றும், நீரும், புவியீர்ப்பு விசையும் இங்கு ஒருங்கே அமைந்துள்ளன.

பூமி தன் அச்சில் 23.4 டிகிரி சாய்ந்த நிலையில் சூரியனைச் சுற்றி வருகிறது. இந்த சாய்ந்த நிலையானது பூமியில் நிலவும் தட்பவெட்ப நிலை, பருவகால மாற்றங்களுக்குக் காரணமாக அமைந்துள்ளது. பூமியைச் சுற்றி ஓசோன் மண்டலம் அமைந்துள்ளது. இது சூரியனிலிருந்து வரும் புறஊதா கதிர்களைத் தடுத்து பூமியில் வாழும் உயிரினங்களைக் காக்கிறது.

பூமியில் 71 சதவீதம் கடலாகவும், ஏனையப் பகுதிகள் நிலமாகவும் உள்ளது. நில பகுதியில் நன்னீர் நிலைகளும், ஆறுகளும், மலைகளும், எரிமலைகளும் உள்ளன. பூமியில் மனிதர்கள் பயன்படுத்தும் வகையில் பல வளங்கள் உள்ளன. இவற்றில் சில புதுப்பிக்க இயலாத வளங்கள் (Non-Renewable), அதாவது தாது எரிபொருள் போன்றவை குறுகிய காலத்தில் உருவாவதில்லை. அதிக அளவிலான தொல்லுயிர் படிம எரிபொருட்கள் பூமியின் மேலோட்டிலிருந்து கிடைக்கின்றது. அவை நிலக்கரி, பெட்ரோல், இயற்கை வாயு மற்றும் மீத்தேன் போன்றவைகளாகும். பூமியின் மேலோட்டில் கனிம தாது படிமங்கள் உருவாகி படிந்துள்ளன.

பூமியின் மேற்பரப்பில் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, புயல், சூறாவளி, இடி-மின்னல், பெருமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்கள் அவ்வப்போது நிகழ்கின்றன.

No comments:

Post a Comment