Pages

Tuesday, August 9, 2011

புயல்

புயல் (Cyclone) அல்லது புயல்காற்று என்பது கடுமையான வேகத்தில் காற்று வீசுவதாகும். மணிக்கு 100 முதல் 250 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இவ்வுலகிலுள்ள காற்று மண்டலத்தில் சூரியனுடைய வெப்பத்தால் ஓரிடத்தில் காற்றின் அழுத்தம் குறைந்தும், மற்றோர் இடத்தில் காற்றின் அழுத்தம் கூடியும் இருக்கும். இந்த காற்றழுத்த வேறுபாட்டால் காற்று அதிக அழுத்தம் உள்ள இடத்தில் இருந்து, குறைந்த அழுத்தம் உள்ள இடத்திற்கு வீசும். எனவே, புயல் வீசும் பகுதி, குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி எனப்படுகிறது.

இந்த புயல்காற்றில் பல வகையான வேறுபாடுகள் உண்டு. பெரும்பாலும் பெருங்காற்று வீசும்பொழுது, மழையும், இடியும் இருப்பது இயல்பு. சுழல்காற்று அடிக்கையில், சுழற்சிக்கு நடுவே அதிக காற்று வீசாமல் அமைதியாய் இருக்கும் ஒரு பகுதி உண்டு, இதனை புயலின் கண் என்பர். இந்த புயற்கண் சுமார் 30-40 கி.மீ. விட்டம் உள்ள பகுதியாய் இருக்கும். இந்த புயற்கண்ணைச் சுற்றி மேகச்சுவர் ஒன்று உண்டு. இப்பகுதியில்தான் மிக அதிக வேகத்தில் காற்று வீசும். பெரும்பாலும் புயல்காற்று கடலில் ஒரு பகுதியில் உண்டாகி, நகர்ந்து நிலப்பகுதியை அடைந்து பெரும் சேதத்தை (அழிவை) உண்டாக்குகிறது.

வழக்கமாக புயல் தோன்றும் ஏழு பெரிய இடங்கள் வானியல் அறிஞர்களால் பட்டியல் இடப்பட்டுள்ளன. அவை, வட அட்லாண்டிக் பெருங்கடல், பசிபிக் பெருங்கடலின் கிழக்கு பகுதி, பசிபிக் பெருங்கடலின் மேற்கு பகுதி, பசிபிக் பெருங்கடலின் தென்மேற்கு பகுதி, இந்தியப் பெருங்கடலின் தென்மேற்கு பகுதி, இந்தியப் பெருங்கடலின் தென் கிழக்கு பகுதி, இந்தியப் பெருங்கடலின் வடகிழக்கு பகுதி.

உலகம் முழுவதும் ஓராண்டில் 80 முறை புயற்காற்று வீசுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment